Friday, 26 December 2014

ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்

ஆழிப்பேரலையின் அழியாத சோகச்சுவடுகள்

“26-12-2004”
இந்த நாளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. லட்சக்கணக்கான உயிர்களை வாரிச்சுருட்டி பலி கொண்ட “சுனாமி” என்னும் கொடூர அரக்கனை இந்த உலகமே அன்று தான் உணர்ந்தது.

அது நாள் வரை ஜப்பானியர்கள் மட்டுமே அறிந்திருந்த “சுனாமி”யை அந்த தினம் தான் உலக மக்கள் தெரிந்து கொண்டனர். கடலுக்கு அடியில் ஏற்படும் பூகம்பத்தின் காரணமாக, கடலின் மேற்பரப்பில் ஒரு பனைமர உயரத்துக்கும் அதிகமான உயரத்தில் எழும் பேரலைகளையே “சுனாமி” என்று குறிப்பிடுகிறார்கள்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷிய கடலில் ஏற்பட்ட பூகம்பத்தால் “சுனாமி” என்னும் ஆழிப்பேரலைகள் உருவானது. அந்த ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம் இந்திய, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் நீண்டு ஏராளமானோரை பலி கொண்டது.
இந்தியாவில் இந்த ஆழிப்பேரலைக்கு தமிழகம், புதுவை, ஆந்திரமாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.
சென்னையில் பொங்கி எழுந்த கடல்நீர் மெரினா கடற்கரையை மூழ்கடித்தது. மனிதர்கள், பொருட்கள், கடைகள் என அத்தனையையும் வாரிச்சுருட்டி கடலுக்குள் இழுத்து சென்றது.
மேலும் பேரலை தாக்கியதில் மீனவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள், வீடுகள் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாயின.யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இந்த ஆழிப்பேரலை தாக்கியதால் உயிர் இழப்பு அதிகமாக இருந்தது. கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய மறுநாள் இந்த கோர சம்பவம் நடக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு தம்முடைய உறவினர்களை இழந்து நிற்கதியாய் மீனவர்கள் தவிப்பதை இன்றும் கடற்கரையோர கிராமங்களில் காண முடிகிறது.
கொடூர காட்சி
கடற்கரையில் கிடந்த மனித உடல்களை பொறுக்கி எடுத்து சென்ற சம்பவம் இன்னும் நம் நினைவை விட்டு அகலவில்லை.. கடல் மண்ணில் புதைந்தும், படகுகள், முட்புதர்களுக்கு இடையேயும் கிடந்த நூற்றுக்கணக்கான மனித உடல்களை எடுத்து வந்த கொடூர காட்சி இன்னும் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறது.
இது மட்டுமின்றி ஆழிப்பேரலையில் சிக்கி காணாமல் போன தங்களது குழந்தைகள் எங்காவது உயிருடன் கரை ஒதுங்கியிருப்பார்கள் என்று எண்ணிய பெற்றோர்கள், 4 மாதங்களுக்கு பிறகு தங்களது குழந்தைகளின் உடலை எலும்பு கூடாக கண்டெடுத்த சோகமும், கதறி அழுததும் இன்னும் நம் காதில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த மீனவர்களின் படகுகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்களா மீது தூக்கி வீசப்பட்டன. இதேபோல் தென்னை மரங்களின் உச்சியில் இருந்தும் படகுகள் மீட்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து கடலூர் சில்வர் பீச்சுக்கு பெற்றோருடன் வந்த தெல்கா என்ற சிறுவனை சுனாமியில் இருந்து மீட்டு, அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் அந்த பெண், சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை. தற்போது அந்த சிறுவன் எங்கே இருக்கிறான் என்பது இதுவரை புரியாத புதிராக இருக்கிறது. அந்த சிறுவனை தேடி அவனது பெற்றோர் பல மாதங்களாக கடலூருக்கு வந்து கண்ணீருடன் தேடி அலைந்ததை மறக்கமுடியாது.
சுனாமி தாக்கியதில் கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, கிள்ளை, பில்லுமேடு, பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், சின்னூர், சி.புதுப்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடற்கரையோர கிராம மக்கள் அனைத்தையும் இழந்து தவித்தனர். அவர்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் ஆதரவு கரம் நீட்டியதன் பேரில் இன்று பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பிறகு ஓரளவுக்கு அதை மறந்தும், மறக்க முடியாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்தவர்கள், தாயை மட்டும் இழந்த குழந்தைகள், தந்தையை மட்டும் இழந்த குழந்தைகள் உள்பட மொத்தம் 91 குழந்தைகள் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்தனர். தற்போது உயர்கல்வி, தந்தை அரவணைப்பில் சென்ற குழந்தைகளை தவிர 15 பேர் மட்டும் உள்ளனர். இவர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
10 ஆண்டுகள்
இந்த கொடூர சம்பவம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால், ஆழிப்பேரலையால் ஏற்பட்ட வடுக்கள் மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. ஆழிப்பேரலை தாக்கி உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 10-ம் ஆண்டு நினைவு தினம் இன்று(வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. பலியானவர்களின் உறவினர்கள் கனத்த இதயத்துடன், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறார்கள். நாமும் அவர்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துவோம்

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.

No comments:

Post a Commentதங்களின் வருகைக்கு மிக்க நன்றி. நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களை யார் மனதும் புண்படாத வகையில் தெரிவிக்கவும். தங்களது கருத்துகளே கல்வித்தேடலின் வெற்றி. நன்றி.